பழநி நில முறைகேட்டில் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் பணிக்கால ஆவணங்களை ஆய்வு செய்ய குழு

பழநி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் சிக்கிய சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனது பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநிதண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ரூ.2 கோடிக்கு சட்ட விரோதமாக தனி நபர்களுக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப் பதிவு செய்து கொடுத்தார். இந்த விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அதே நாளில், பழநியில் உள்ள ரூ.60 கோடி மதிப்பிலான 1.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு தனிநபருக்கு அவர் பதிவு செய்து கொடுத்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்தது. இதுதவிர அவர் மீது சில புகார்கள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

6 பேர் குழு

இதையடுத்து சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனது பணிக்காலத்தில் பதிவுசெய்த அனைத்து விதமான ஆவணங்களையும் ஆராய 6 பேர் கொண்ட சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் சுவாமிநாதன், சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன், சேலம் மேற்கு சார்-பதிவாளர் கீதா, விருதுநகர் சார்-பதிவாளர் காஜா முகைதீன், அலுவலக உதவியாளர்கள் மோகன்ராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜஸ்டின் மணிகண்டன், பழனிபதிவு மாவட்டத்தில் பணியேற்ற 2024 பிப்.5 முதல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாள் வரை அவரது பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் இந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து, 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிக்கை கிடைத்தபின் சார்-பதிவாளர் மீது மேலும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.