பழநி முருகன் கோயிலில் ‘இந்து அல்லாதோர் நுழைய தடை’

பழநி முருகன் கோயிலில் ‘இந்து அல்லாதோர் நுழையத் தடை’ என மீண்டும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநியைச் சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்து சமய அறநிலையத் துறைக் கோயில் நுழைவு விதிகளில், ‘இந்து மதத்தை சாராத யாரும், இந்து கோயிலுக்குள் நுழையக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்து கோயிலுக்குள் இந்து மதத்தைச் சாராதவர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்தில் அந்த விதி ஏற்படுத்தப்பட்டது.

இறை நம்பிக்கை இல்லாதோரும், மாற்று மதங்களைப் பின்பற்றுவோரும் இந்து கோயிலுக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விதிகளைப் பின்பற்றி பழநி முருகன் கோயிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதனால் பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்க வேண்டும். மீண்டும் அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதிடுகையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டம்-1947 விதி 48-ன் படி இந்து கோயிலுக்குள் இந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்க வேண்டும் என தெளிவாக உள்ளது. இதனால் பழநி கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழையத் தடை விதிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்புப் பலகையை அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத் தடை என்ற அறிவிப்பு பலகை ஏன் அகற்றப்பட்டது? அந்த அறிவிப்புப் பலகையை, அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் அமைக்க வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.