பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன்!

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்று ப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கொங்கு மண்டல பகுதி மக்கள் நல்லவர்கள், அவர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள்.

நான் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எனது வேலை. பாராளுமன்ற தேர்தலுக்கள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அரசு உரிமைத் தொகை வழங்குவதாக கூறி உள்ளது. நிதிநிலை சரியில்லாத நேரத்தில் எப்படி கொடுப்பார்கள். இது சாத்தியமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது. இரவு 11.30 மணிவரை என்னிடம் விசாரணை நடத்தினார்கள். இரவு 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக கூறினார்கள். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனவே, அமலாக்கத்துறை விசாரணைக்கு யாராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு அமைச்சரிடம் விசாரணை நடத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளிக்கிறார்.

தி.மு.க அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், தனது கட்சியின் பிரச்சினையில் முனைப்பு காட்டி வருகிறது. சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. உரிமம் இன்றி 24 மணிநேரமும் பார் செயல்படுகிறது. ஆனால் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட அரசு, விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும். தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் சரியாகும். இவ்வாறு அவர் கூறினார்.