மகளிர் உரிமைத்தொகை திட்டத் தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 16-ம் தேதி சென்னையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக் கத்தின் நிறைவு விழா நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை. அனை வருக்கும் எல்லாம் வழங்க வேண்டும் என்று சொல்லவில்லை.
ஆனால், வசதி படைத்தவர்களை தவிர்த்து ஏழை, நடுத்தர மக்களை இந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பருத்தி குவின்டாலுக்கு ரூ.7 ஆயிரம் விலை நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது போதுமான விலை இல்லை என்று விவசாயிகள் கருதுகிறார்கள். தமிழக அரசு பருத்தியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு பாஜகதான் காரணம். ஆளுநர் அவரது அணுகுமுறையை மாற்றிக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் அவர் அப்படித்தான் பேசுவார் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் மக்களிடையே எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, மதுக்கூர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பழநியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், பழநி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதோர் வரக்கூடாது எனக் கூறி வருகின்றனர். வழிபாட்டு தலங்களுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம்.
மத அடிப்படையில் இதை ஒரு பிரச்சினையாக்குவது கண்டனத்துக்குரியது. பழநி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சிப்காட் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிப்காட் அமைந்தால் நாட்டின் உற்பத்தி உயரும். ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், பழநி ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.