மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒருவர் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கோதண்டபாணி (44), ஆவடி டேக்ங் பேக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் மற்றும் 13 வயதில் பிரதிக் ஷா என்ற மகள் உள்ளார்.
பிரதிக் ஷாவுக்கு 3 வயது இருக்கும்போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிறுமியின் காலின் பாதம் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மகளுக்கு கால் பறிபோகக் காரணம் எனக்கூறி, நீதி கேட்டு 5 ஆண்டுகளாக தலைமைக் காவலர் தொடர்ந்து போராடி வருகிறார்.
மருத்துவத் துறை அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் எனப் பல இடங்களில் முறையிட்டும் அவரது கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. இந்நிலையில், மகளுக்கு நீதி கேட்டு, சீருடையில் தலைமைச் செயலக நுழைவு வாயிலுக்கு நேற்று வந்த கோதண்டபாணி, திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும், 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறிய, மகளுக்கு நீதி கேட்டு கோஷமிட்டார்.அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் உடனடியாக தீயை அணைத்து கோதண்டபாணியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முன்னதாக, தலைமைக் காவலர் கோதண்டபாணி கூறுகையில், “மகள் பிரதிக் ஷாவுக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் காண்பித்தேன்.
அப்போது, காலில் அரிப்பும் ஏற்படத் தொடங்கியது. இது சாதாரண அரிப்புதான் எனக் கூறி அலட்சியமாக சில மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைத்தனர். பின்னர், 2 நாளில் மீண்டும் காலில் அரிப்பு அதிகரித்தது.
வலது காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என கூறினர். இறுதியில் அவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் மகளின் கால்பாதத்தை அகற்றும் நிலை ஏற்பட்டது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது மகளுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்” என்றார்.


