“மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” – அன்புமணி ராமதாஸ்

மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்தக் கொடிய குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள், ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஓர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஓர் இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.

நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்தக் கொடிய குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை. மே மாதம் 4-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்தக் குற்றங்கள் இப்போது காணொலியாக வெளியாகியிருப்பதன் மூலம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்தக் குற்றமும் செய்யவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னொரு பிரிவினரால் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பிச் சென்றதுதான் அவர்கள் செய்த குற்றம் ஆகும்.