மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை: நாடுகளின் பெருமையும், சிறப்பும் அந்நாட்டு மக்களின் கல்வி அறிவில் தான் அமைந்துள்ளது. அத்தகு கல்வியறிவை வளர்ப்பதற்காக, முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி தினத்தில், உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திக தலைவர் கி.வீரமணி: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னையில் சிறப்பாக அமைத்து, அண்ணாவுக்கு பெருமை சேர்த்தார். தற்போது அவரது மகன் முதல்வர் ஸ்டாலின், கல்வியின் தேவையை உணர்ந்து, மக்களுக்குப் பயன்தரும் வகையில் மதுரையில் நூலகம் அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
அண்மையில் சென்னையில் பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்தது உடலைவளப்படுத்துவதற்காக. அதேபோல, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்தது மக்களின் அறிவு வளத்தைப் பலப்படுத்துவதற்காக.
இந்திய பதிப்பாளர் மற்றும் படைப்பாளர் சங்கத் தலைவரும், பபாசி துணைத் தலைவருமான பெ.மயில வேலன், இந்திய பதிப்பாளர் மற்றும் படைப்பாளர் சங்கம் மற்றும் பபாசி இணைச் செயலாளர் மு.பழநி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டமான புத்தகப் பூங்கா அமைக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்று அறிவுறுத்தியது போற்றுதலுக்கு உரியது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தியது அரசின் உயரிய செயலாகும். தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் அம்ச வேணி பெரியண்ணன் எழுதிய நூல்களை நாட்டுடமையாக்கியது, பெண்ணிய எழுத்தாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நூலகத்துக்கு ரூ.40 கோடி மதிப்பிலான, 3.5 லட்சம் புத்தகங்களை வாங்கி, பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோருக்கு நன்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.