மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்… பிரதமர் மோடி உத்தரவு…!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க துறை அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

மத்திய – மாநில அரசுகள் தொடர்புடைய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் 42-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 12 முக்கியத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன. இதில், மருத்துவ துறை சார்பாக 7 திட்டங்கள் மற்றும் ரயில்வே, சாலைப் போக்குவரத்து உட்பட 10 மாநிலங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன், மதுரை, ராஜ்கோட், ஜம்மு உட்பட 7 இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மேலும், இவற்றை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.