தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக.18.ம் தேதி நடைபெறும் மீனவர் சங்கங்களின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திடக் கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.
முதல்வர் பங்கேற்பு: இம்மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதை ஏற்று, மாநாட்டில் பங்கேற்க முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.