வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் 21.07.2023 அன்று அளித்த பதில் வருமாறு:-
(அ) இந்திய ரயில்வே மேலும் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் யாவை?
(இ) அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(ஈ) வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் தேவை அதிகமாக இருக்கும் நாட்டின் தெற்குப் பகுதியில் அதிகமான வந்தே பாரத் ரயில்களை இயக்காததற்கான காரணங்கள் என்ன?
(உ) தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற ரயில்களை இயக்க அரசு பரிசீலிக்குமா?
இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்
(அ) முதல் இ) வரை கேள்விகளுக்கான பதில்:
2023 ஜூலை மாதத்தில், 22549/22550 கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 12461/12462 ஜோத்பூர் சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இந்திய இரயில்வேயில் செயல்பாட்டு சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் இரயில் பெட்டிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கு உட்பட்டது.
(ஈ) மற்றும் (உ) கேள்விகளுக்கான பதில்: இந்திய இரயில்வே, மாநிலம்/பிராந்திய வாரியாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை, ஏனெனில் ரயில்வே நெட்வொர்க் மாநிலம்/பிராந்திய எல்லைகளை கடந்து செல்கிறது. இருப்பினும், 20643/20644 எம்ஜிஆர் சென்னை கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 20607/20608 சென்னை – மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
20833/20834 விசாகப்பட்டினம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 20701/20702 செகந்திராபாத்-திருப்பதி எக்ஸ்பிரஸ், 20633/20634 காசர்கோடு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் 20661/20662 கே.எஸ்.ஆர் பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் போன்றவை என நாட்டின் தெற்குப் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது.