வரதட்சணை கொடுமை வழக்குகளில், வழக்குக்கு சிறிதும் சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை கைது செய்வது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ளக் கூடாது என்றும், இந்த கைது நடவடிக்கைகளை குற்றவியல் நடுவர்களும் இயந்திரத்தனமாக அங்கீகரித்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் கூடாது என்றும் அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவுபடி, தமிழகத்திலும் வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களை கவனமாக கையாள வேண்டும் என காவல்அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என, மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களில் கணவர்மட்டுமின்றி, அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் எஃப்ஐஆரில் சேர்த்து, தேவையில்லாமல் குடும்ப உறுப்பினர்களை போலீஸார் கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
வரதட்சணைக் கொடுமை புகாரில் கணவரை மட்டுமே எஃப்ஐஆரில் சேர்க்க வேண்டும். விசாரணைக்குப் பிறகே குடும்ப உறுப்பினர்கள் அந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்களா, இல்லையா என்பது தெரிய வரும் என்பதால், எஃப்ஐஆரில் கணவரின் பெயருடன் மற்றும் பலர் எனக் குறிப்பிட லாம்.
ஏனெனில், கணவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஆரம்ப கட்டத்திலேயே எஃப்ஐஆரில் சேர்ப்பதால், அதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, அவர்களுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக தகுந்தசுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.