வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் நேற்று நேரில் வந்தார். அங்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-கை சந்தித்து வலியுறுத்தி மனு அளித்தார்.