‘‘வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க உதவும் பட்ஜெட்’’ – டிடிவி.தினகரன்

மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9வது ஆண்டாக தாக்கல் செய்திருப்பதோடு, அதிக முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்குமான வளர்ச்சி எனும் உன்னத கோட்பாட்டை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய நிதிநிலை அறிக்கை, வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இந்தியாவின் இலக்கை எளிதாக எட்டிப்பிடிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பது வரவேற்புக்குரியது.

ஆதிச்சநல்லூர் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படுவதோடு, கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களின் பாரம்பரியத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதோடு ஐதராபாத் முதல் சென்னை வரையிலும், சென்னை முதல் பெங்களூரு வரையிலும் அதிவேக ரயில் வழித்தடங்கள், பழவேற்காடு ஏரியில் பறவைகளைக் காண பிரத்தியேக காட்சி மையம், பொதிகை மலையில் மலையேற்றத்தை ஊக்குவிக்கத் திட்டம் என தமிழகத்திற்கென பல்வேறு திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விவசாய வளங்களை அணுக ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கம், 2030 ஆம் ஆண்டிற்குள் முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும், ஏற்றுமதிக்கான திறனை அதிகரிக்கவும் பிரத்தியேக திட்டம், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேங்காய் ஊக்குவிக்குப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வேளாண்மை மீதான மத்திய அரசின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

உயர் கல்வித்துறையில் முதலீடு செய்வதன் மூலம் புதிய கல்வி நிறுவனங்கள், ஐந்து பல்கலைக்கழக நகரங்கள், மும்பை ஐஐடியுடன் இணைந்து 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ( Animation, Visual Effects, Gaming and Comics ) எனும் படைப்பாற்றல் ஆய்வகங்கள் போன்றவற்றோடு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெண் கல்வியை மேலும் ஊக்குவிக்கவும் அவர்கள் தொழில் முனைவோர்களாக உருவெடுக்கவும் வழிவகை செய்கின்றன.