விசைத்தறியை இயக்கி வாக்கு சேகரித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா

அருப்புக்கோட்டையில் விசைத்தறியை இயக்கி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் ராதிகா, நெசவாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா, அருப்புக்கோட்டையில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அருப்புக்கோட்டை காந்தி மைதானத்தில் தொடங்கி வேலாயுதபுரம், திருநகரம், தெற்குத் தெரு, விவிஆர் காலனி, எம்டிஆர் நகர், அஜீஸ் நகர், பெரிய பள்ளிவாசல், புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, திருகுமரன் நகர், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டங்குடி, புலியூரான், ராமலிங்கா மில், ஆத்திப்பட்டி, நேரு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் திருநகரம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, திடீரென அங்கிருந்த ஒரு விசைத்தறிக் கூடத்துக்குள் நுழைந்த பாஜக வேட்பாளர் ராதிகா, விசைத்தறியை இயக்கி அங்கிருந்த நெசவாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அதோடு, அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, நெசவாளர்கள் பேசுகையில், “அருப்புக்கோட்டையில் ஆயிரக்கணக்கான கைத்தறிகள் இருந்தன. கட்டுப்பாடுகளால் தற்போது 100ஆக குறைந்துவிட்டது. ரகக் கட்டுப்பாடு காரணமாக நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். கைத்தறி நெசவாளர்கள் தொழிலைவிட்டு வெளியேறிவிட்டனர். வெளிப்படையாக போதைப் பொருள் விற்பனை செய்வோரை போலீஸ் கைது செய்வதில்லை, ஆனால் எங்களை கைது செய்கிறார்கள். 1972-ல் காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தையே இன்றவும் பின்பற்றப்படுகிறது” என்று கூறினர்.

இதையடுத்து, “இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும். என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர உறுதுணையாக இருப்பேன்” என்று கூறி பாஜக வேட்பாளர் ராதிகா வாக்கு சேகரித்தார்.