ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் போகிற போக்கில் தட்டிவிட்ட செய்தியானது பல கட்சிகளையும் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கேகூட ‘அதிகாரப் பங்கு’ என்ற பதம் இனிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸார் சிலர் அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை தைரியமாக முன்னெடுத்து வருகிறார்கள். இதே சிந்தனையில் இருக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தவெகவை நோக்கி நகரும் போக்கில் தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த மே மாதமே தொடங்கிவிட்ட கிருஷ்ணசாமி, “ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒரு எம்எல்ஏ வெற்றிபெற்ற பிறகுதான், விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்க முடிந்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், 25 முதல் 30 சதவீதம் உள்ளோம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்மிடம் பிரிவினை வரக்கூடாது. ஒற்றுமையின் மூலமாகவே, இழந்த அதிகாரத்தை நாம் பெறமுடியும். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற லட்சியத்துடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்” என்று சொல்லி வருகிறார்.
இதைவைத்து, தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா புதிய தமிழகம் என்று கேட்டால், “மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளோ, “அடித்தட்டு மக்களின் வலிகளை உணர்ந்தவர் எங்கள் தலைவர். மற்றவர்களைப் போல் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு அதை நிறைவேற்றாமல் போவது எங்கள் வழக்கம் கிடையாது.
கூட்டணி குறித்தும் நாங்கள் போட்டியிடப் போகும் தொகுதிகள் குறித்தும் ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு டாக்டர் முடிவெடுப்பார்.
நாங்கள் அமைக்கப் போகும் கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வெற்றிக் கூட்டணி ஒன்று உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. நிச்சயம் அந்தக் கூட்டணி திமுக அணிக்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும்” என்கிறார்கள்.