கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காய்வாய் அமைக்கும் பணிகளுக்கு 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, சிதம்பரம் வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் என்.எல்.சி நிர்வாகம் இறங்கியுள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நெற்பயிர்கள் அறுவடை நடைபெற உள்ள நிலையில், இந்த விளைநிலங்களை அழிக்கும் செயல் கொலைபாதகச் செயலின்றி வேறென்ன? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
அங்கே விவசாயிகள், என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு எந்தவித போராட்டமும் ஏற்படாமல் தடுக்க விழுப்புரம் டி.ஐ.ஜி ஷியாவுல்ஹக் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் என்.எல்.சியின் அடியாட்கள் போல் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்ட பின்பும், விவசாயம் செய்ய அனுமதித்ததாகவும் விளக்கமளித்துள்ளது என்.எல்சி. என்ன கொடுமையிது.. இனி சோற்றை உண்ணாமல் நிலக்கரிகளை உண்ண சொல்கிறதா என்பது தெரியவில்லை.
இத்தகையக் கொடுமைகள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது. உயிர்போல் காத்த நிலங்களை விளைந்த பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலை செயலை என்.எல்.சி நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அமைச்சர் என்று சொல்லும் அந்த மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்.எல்.சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
விளை நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்; பெரும்பான்மை யான விவசாயிகளை வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்குள்ளேயே காவலில் சிறை வைக்கப்பட் டிருக்கின்றனர்
03.1.2019 இல் கவன ஈர்ப்பு தீர்மானத்தில், சட்டமன்ற பேரவைவிதி 55-இன் கீழ் கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி நிலக்கரி நிறுவனம் மூன்றாவது சுரங்க திட்டத்திற்கு புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட 37 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை NLC நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் இந்த நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர் மத்தியில் பதற்றம் குறித்து விவாதிக்க வேண்டும். உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று தி.மு.க. அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது வாய்ச்சவடால் விட்டது.
இப்போது நிலை என்ன?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்த்த இந்த செயலை ஆளுங்கட்சியாக இருக்கும் போது செய்கிறது; ஒன்றிய அரசுக்கு துணை போகிறது.. இதைவிட நாட்டில் பித்தலாட்டம் ஒன்று உண்டா? “ அது வேறவாய்.. இது நாற வாய்” என்பது போல் இருக்கிறது! விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்றுவதுதான் திராவிடமாடலா?!
விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இந்தப் படுபாதகச் செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். என்.எல்.சி. நிருவாகம் விளை நிலங்களில் இறக்கியுள்ள JCP களை உடனடியாக கரையேற்றவேண்டும். இல்லையெனில் ஒன்றிய அரசுக்கு துணைபோகும் தி.மு.க. அரசுக்கு எதிராக பெரும் உழவர் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!
இங்ஙனம்
சேது. கருணாஸ் Ex. M.L.A.,
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை