திமுக – விசிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப். 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸுக்கு 28, இந்திய கம்யூ. 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமக தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட சில கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு மட்டுமே இழுபறியில் உள்ளன. மார்க்சிஸ்ட் 7, விசிக 8 என கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றன. ஆனால், திமுக தரப்பில் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. இதனால் உடன்பாடு ஏற்படாமல் இருதரப்பிலும் இழுபறி நீடித்துவருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் அவரது இல்லத்தில் நேற்றும் சந்தித்துப் பேசினார். அப்போது, 6 தனித் தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் என 8 தொகுதிகள் வரை தங்களுக்கு வேண்டுமென திருமாவளவன் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு 7 இடங்கள் வரை ஒதுக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடுஒப்பந்தம் இன்று (மார்ச் 20)கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கி உடன்பாட்டை முடிப்பதற்கு திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விருப்ப மனு: இதற்கிடையே, விசிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 21-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும், கட்சியின் தலைமையகத்தில் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். மேலும், திருமாவளவன் தலைமையில் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.





