சாதாரண விமானங்களை விட போர் விமானங்களை இயக்குவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது. போர் சமயங்களில் இந்த விமானங்களை இயக்கும் பைலட்டுகள் எதிரி நாட்டுக்கு சென்று திரும்பும் போது உயிரை பணயம் வைத்து செயல்படுகின்றனர். இதனை மனதில் வைத்து தற்போது ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் யு.ஏ.வி. எனப்படும் ஆளில்லா விமானம் ராணுவத்தில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ரிமோட் கன்ட்ரோல் மற்றும் தன்னியக்கம் மூலம் செயல்படும் இந்த வகை விமானங்கள் இலக்கை நோக்கி சென்று திரும்புவதில் சிறப்பாக செயல்படுகின்றன. டிரோன் தொழில்நுட்பத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட பிரிவாக அமைகிறது. நாட்டின் ஆளில்லா பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பெரிய பகுதியாக இந்த ஆளில்லா விமானங்கள் இருக்கின்றன.
இவற்றை பயன்படுத்தி இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மிகவும் திறம்பட கையாளவும் உதவும். மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வெளிநாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படும். இதனிடையே உள்நாட்டு ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் டிரோன்களின் உற்பத்தி ஆகியவற்றுக்காக தற்போது வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலை இருந்தது. தற்போது மத்திய அரசு உள்நாட்டிலேயே புதிதாக ஆளில்லா விமான தொழில் நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து நாட்டிலேயே முதன்முறையாக பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்பு திட்டத்தின் (டி.டி.ஐ.எஸ்.) கீழ் ஆளில்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (டிட்கோ) இணைந்து கெல்ட்ரான் தலைமையிலான கூட்டமைப்பு இதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. இதை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.50 கோடியில் இந்த மையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை கட்டுப்பாட்டில் இந்த சோதனை மையம் அமைக்கப்படுவது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைய உள்ளது.
இந்த சோதனை மையம், அதிநவீன தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக உள்ளது. இது முன்னேற்றம், முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் டிரோன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையமாக இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவதற்கான ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டிரோன் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நேரத்தில் ஆளில்லா விமான சோதனை மையம் நிறுவப்படுவது வளர்ச்சியை நோக்கிய மற்றொரு அம்சமாகும். 22 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதம் மற்றும் 2025-ம் ஆண்டுக்குள் ரூ.28 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு என மதிப்பிடப்பட்ட நிலையில், டிரோன்கள் பல்வேறு துறைகளில் முக்கியமான கருவிகளாக மாறியுள்ளன.
கெல்ட்ரான் தலைமையிலான கூட்டமைப்புடன்,டிரோன் துறையில் உள்நாட்டு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை வளர்க்க இந்த மையம் சிறந்த வாய்ப்பாக அமையும். பாதுகாப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட சோதனை உள்கட்டமைப்பு திட்டம் பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு திறன்களையும் தன்னம்பிக்கையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் மூலம் அமையும் ஆளில்லா விமான பயிற்சி சோதனை மையம் இந்த துறையில் வெளிநாட்டை சார்ந்திருப்பதை குறைக்கிறது. மேலும் இதற்கான தொழில்நுட்ப த்தில் உலக அளவில் இந்தியா வின் நிலைப்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆளில்லா விமானங்களில் உள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட நுண்ணறிவு சேகரிப்பு, டிரோன்கள் மூலம் சேகரிக்கப்பட்ட படங்கள் எதிரிகளின் நிலைகளை அடையாளம் காணவும், நிலப்பரப்பை மதிப்பிடவும் மற்றும் இயக்கங்களைக் கண்காணிக்கவும் உதவும். இந்த வகை விமானங்கள் அணுக முடியாத பகுதிகளில் யாரும் சிக்கியிருந்தால் அவர்களை கண்டறிந்து மீட்க உதவும். அத்தகைய நேரத்தில் அங்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படும். மேலும் ஆளில்லா விமானங்கள் தரைப்படைகளுக்கு வான்வழி ஆதரவை வழங்கவும், நவீன ரக ஆயுதங்கள் மூலம் எதிரிகளின் நிலைகளை குறிவைத்து தாக்கவும், எல்லைகளில் ரோந்து மற்றும் உளவுப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படும்.
ஒருங்கிணைந்த சோதனை வளாகம் எலக்ட்ரானிக்ஸ் ஆப்டிக்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் மற்றும் ஆர்.எப். ஆண்டெனாவைத் தவிர மின்காந்த இணக்கத்தன்மை அல்லது மின்காந்த குறுக்கீடு சோதனையை இலக்காகக் கொண்டுள்ளது. வல்லம் வடகடலில் பல எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சார்ந்த தொழில்கள் இருப்பதால் தகவல் தொடர்பு சோதனை தொடர்பான ஆய்வுகளுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.