‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு தள்ளிவைப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு

ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘ஸ்லெட்’ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ‘ஸ்லெட்’ தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘ஸ்லெட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மைய விவரம் தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தெரிவிக்கப்படும் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என 2 ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஸ்லெட்’ தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இன்று (ஜூன் 6) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும், ‘ஸ்லெட்’ தேர்வுக்குழுவின் உறுப்பினர்-செயலருமான பேராசிரியர் ஜெ.சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது. புதிய தேர்வு தேதி விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘ஸ்லெட்’ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.