‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக தலைவர் விஜய்யை இழுக்க அமித் ஷா அதிரடி முயற்சி’ என்று வரும் எதிர்பாராத செய்திகளால் தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஆளும் கட்சியான திமுக ஆரம்பம் முதலே தனது கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டேவருகிறது. ஆனால், கூட்டணி விஷயத்தில் அதிமுக, பாஜக, தவெக போட்ட கணக்குகள் எல்லாம் சொதப்பலாகி வருகிறது. இதையடுத்து நேரடியாகவே களத்தில் இறங்கி இருக்கும் அமித் ஷா, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை வேகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “இம்முறை எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருக்கிறது. ஆனால், பழனிசாமியின் பிடிவாதத்தால் சசிகலா, ஓபிஎஸ், தேமுதிக உள்ளிட்ட சக்திகளை நழுவவிட்டு விட்டோம். நாங்களே இறங்கிப் பேசி இருக்காவிட்டால் தினகரனும் திசை மாறிப் போயிருப்பார்.
பழனிசாமி இப்படி கூட்டணி விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கும் அதேசமயம், சின்னச் சின்னக் கட்சிகளைக் கூட தேடிப்பிடித்து அழைத்து வந்து கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதனால், திமுக அணி தான் ஜெயிக்குமோ என்ற தோற்றம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படி நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்து தான் அமித் ஷாவே நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். முதல் கட்டமாக சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், ‘பாஜக-வுக்கு 55 தொகுதிகளைக் கொடுங்கள். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான இடங்களையும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள்; நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்’ என பியூஷ் கோயல் கேட்டுள்ளார். ஆனால் பழனிசாமியோ, ‘பாஜக-வுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் தரவாய்ப்பில்லை’ என்று சொல்லி இருக்கிறார். மக்களவைத் தேர்தல் வாக்கு சதவீதத்தைச் சொல்லி கோயல் விடாப்பிடியாக வாதாடவும், பேச்சுவார்த்தையை பாதியிலேயே முறித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார் பழனிசாமி.
இதையெல்லாம் அறிந்த அமித் ஷா உடனடியாக பழனிசாமியை டெல்லிக்கு அழைத்துப் பேசினார். அவரிடமும் பழனிசாமி பிடி கொடுக்காததால் தான், தற்போது ‘டார்கெட் விஜய்’ ஆபரேஷனில் இறங்கி இருக்கிறார் அமித் ஷா. அதன்படி விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பியூஷ் கோயல் மூலமாக அமித் ஷா விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ‘திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இலக்கு.
எனவே, நீங்கள் என்டிஏ-வுக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு 50 சீட், துணை முதல்வர் பதவி தருகிறோம். நீங்கள் தனித்து நின்றால் அது திமுக-வுக்குத்தான் வாய்ப்பாக அமையும்’ என பாஜக தரப்பில் பேசப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நேரடியாகவே விஜய்யிடம் அமித் ஷா தரப்பு பேசியதாகவும் சொல்கிறார்கள். திமுக தான் தனது மெயின் டார்கெட் என்பதால் விஜய்யும் இந்த விஷயத்தில் ஊசலாட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. இதனிடையே, பாஜக-வின் இந்த மூவ்களை எல்லாம் அறிந்த பழனிசாமி, ‘கூட்டணி ஆட்சிஎல்லாம் ஒத்துவராது. விஜய்க்கு 50 சீட், பாஜக-வுக்கு 55 சீட் என்றால் நாங்கள் எங்கே போவது?’ என கொந்தளித்ததாகத் தெரிகிறது.
இருப்பினும் பழனிசாமியை சம்மதிக்க வைக்கும் வேலைகள் நடக்கின்றன. ஒருவேளை பழனிசாமி இறுதிவரை சம்மதிக்க வில்லை என்றால், அதிமுக-வில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கும் அமித் ஷா தயங்கமாட்டார் போலிருக்கிறது. ஏனென்றால் கண்ணுக்கு எதிரே தெரியும் வாய்ப்பை அவர் கைநழுவ விட தயாராய் இல்லை” என்றனர்.
இந்த நிலையில், விஜய்க்கு எதிரான கருத்துகளை யாரும் பொதுவெளியில் பேசவேண்டாம் என பாஜக-வினருக்கு டெல்லி தலைமை உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இதைவைத்து, “தேஜ கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது” என தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே வெல்கம் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். பாஜக தரப்பிலிருந்து இப்படியான செய்திகள் வந்தாலும், “கொள்கை எதிரி என்று சொன்ன பிறகு அவர்களோடு நாங்கள் எப்படி கூட்டணி வைக்கமுடியும்? இதெல்லாம் திமுக செய்யும் லாபி” என்கிறது தவெக வட்டாரம்.
இது குறித்து தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டதற்கு, “தேஜ கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வருவதற்கு அமித் ஷா முயற்சிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை” என்று மட்டும் சொன்னார்.
வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகையில் , “தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து பலம் பெறுவது வரவேற்கக்கூடிய ஒன்று. காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என விஜய் எதிர்பார்த்தார், ஆனால் அது நடக்கவில்லை. ப.சிதம்பரத்தை வைத்து காங்கிரஸை, திமுக வளைத்துபோட்டுவிட்டது. விஜய்யுடன் இனி யார் கூட்டணிக்கு செல்வார் எனத் தெரியவில்லை.
இப்படியான சூழலில் விஜய்யிடம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பதாக தகவல். அப்போது தேஜ கூட்டணியில் இணைந்தால் நல்லது என ஆலோசனை வழங்கியதாவும் தகவல். விஜய்க்கு 17 முதல் 20 சதவீத வாக்குகள் இருந்தாலும், கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே இனி முடிவை விஜய்தான் எடுக்க வேண்டும்” என்றார்.





