இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

ரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளமையை தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (21) தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது.

இதன்போது அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி, தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்பாக அவரிடம் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்த இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வலியுறுத்தல் தொடர்பில் பலதரப்பட்ட பிரதிபலிப்புக்களை வெளிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் இவ்விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது சட்ட விரோதமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தம் ஒருபுறமிருக்க ஒற்றையாட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர்வே தமிழ் மக்களின் அபிலாஷையாக காணப்படும் நிலையில், அதனையும் மோடி தனியாக வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி, இவ்விரு விடயங்களையும் தனித்தனியாக நோக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்ததாக, இந்தியாவின் கடந்த கால வலியுறுத்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை ’13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை ஓரளவுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நகர்வாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்திய பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால், அதனையும் தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பிரதமர் மோடியின் வலியுறுத்தல் தொடர்பில் திருப்தியடைவதாக கூற முடியாது என்றும், மாறாக அவர் தனது கடமையை தான் செய்திருக்கின்றார் என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டது என்றும் எனவே, அது சார்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இந்திய பிரதமரினால் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கை மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் வரவேற்பதாகவும், தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

மேலும், இது குறித்து கருத்து வெளியிட்ட டெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பிரதமர் மோடியினால் வலியுறுத்தப்பட்ட விடயங்களை நாம் வரவேற்கும் அதேவளை இது எமக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது இந்திய விஜயத்தின் பின்னர் 13, 13பிளஸ் என்றெல்லாம் பேசிய போதிலும், அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இம்முறையும் இவ்வலியுறுத்தல்கள் வெறும் பத்திரிகை செய்திகளாக நின்றுவிடாமல், அவை உரியவாறு நிறைவேற்றப்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.