திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன் இதுதொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளான கடந்தாண்டு டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்றக் கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2025 டிசம்பர் 1-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அதிகாரிகளும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் டிவிஷன் பெஞ்ச், அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
ஆனால், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதேபோல, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பிரதான மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உட்பட சில சரத்துகளை உத்தரவில் இருந்து நீக்க கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதிகள், கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள அந்த தீபத் தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா என்று கேள்வி எழுப்பினர்
அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை இதற்கு முன்பு இல்லை. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் புதிய நடைமுறையை செயல்படுத்தும் வகையில் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘‘ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு புதிய மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுவும் தீபத் திருநாள் நெருங்கும் வேளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் இவ்வாறான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
ஒருவேளை மனுதாரருக்கு நல்ல நோக்கம் இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளாக அவர் ஏன் வழக்கு தொடுக்கவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது, எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதமே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது தாமதமாக மேல்முறையீடு செய்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார். மேலும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகக் கூறி வழக்கை தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அதை கேட்ட நீதிபதிகள், ‘‘ஜனவரி மாதமே உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த நிலையில், இத்தனை நாட்களாக தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது?’’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அறநிலையத் துறை தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கு தொடர்புடைய பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருந்ததால் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தற்போதைய நிலையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது. அனைத்து மனுக்களையும் முழுமையாக விசாரித்த பிறகே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட சரத்துகளை உத்தரவில் இருந்து நீக்க கோரி ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு, திருச்சி வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோயில் செயல் அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இந்த வழக்கை தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவோடு இணைத்தும் உத்தரவிட்டனர். இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கின் விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space