தேவேந்திர முனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த ஏழு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்துக்கப்பால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் கடல்சார் பங்காளர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகும் ஏழு சந்தேகநபர்களும் தற்போது கரைக்குக் கொண்டு வரப்படுவதுடன், மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படைக் கூட்டணியான ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின்  உறுப்பினராகவும், கொழும்பில் உள்ள தகவல் ஒருங்கிணைப்பு மையம் ஊடாகவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் இலங்கை விமானப்படையின் கூட்டு வான்வழி கண்காணிப்பு உதவியுடன் இலங்கை கடற்படை இத்தகைய கடத்தல் வலையமைப்புகளை முறியடித்து வருகிறது.தீவுகள் ஆராயுங்கள்

2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'ஒன்றிணைந்த தேசம்' போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மொத்தத் தெருமதிப்புடைய போதைப்பொருட்களைக் கடற்படை கைப்பற்றியுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட கடற்படை நடவடிக்கைகளில் 4 வெளிநாட்டுப் படகுகள் உட்பட 66 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 18 வெளிநாட்டவர்கள் உட்பட 379 சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.