மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்ளளும்  ஜனாதிபதியின் முடிவு அவர்கள் முன்னரைப்போலவே அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளது.மாகாண சபைகள் தேர்தலுக்கு எதிராக அப்போது ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பலியெடுத்தவர்கள் தற்போதும் அதே நிலைப்பாட்டில்தானா  இருக்கின்றார்கள் என  ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (26) இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறுகேள்வி எழுப்பினார்.

அவர் அங்கு  மேலும்  உரையாற்றுகையில்,

மக்கள் மயமான அரசாங்கம் என்று கூறுகின்றனர். அப்படியென்றால் எதற்கு பயங்கரவாத சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தையும் கொண்டு வர வேண்டும்? மக்கள் மயமான அரசாங்கம் என்றால் இவ்வாறான ஒடுக்குமுறை சட்டம் அவசியமில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதவாது நடந்தால் மக்களே அரசாங்கத்தை பாதுகாக்க முன்வருவர். ஆனால்  அரசாங்கத்திற்கு எதிராக வெளிக்கிளம்பியுள்ள மக்கள் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கே  இந்த சட்டமூலங்கள் கொண்டு வரப்படுகின்றன.  

இதேவேளை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு உள்ளது. இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம். இந்த நாட்டில் பல தசாப்தங்களாக யுத்தம் நடைபெற்ற நிலையில் அதற்கு தீர்வாக மாகாண சபைகள் கொண்டு வரப்பட்டன . அதிகாரங்கள் பகிரப்பட்டன .

இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தவே அதிகாரங்கள் பகிரப்பட்டன. ஆனால் இன்று மாகாண சபைகள் இயங்கவில்லை. ஏன் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படவில்லை என்று கேட்கின்றோம். உரிய திகதியில் தேர்தல் நடக்கும் என்று ஆட்சிக்கு வர  முன்னர் கூறினீர்கள். ஆனால் இன்று குழுவை அமைத்து அது இழுத்தடிக்கப்படுகின்றது. அதில் தீர்வு கிடைப்பதில்லை.

அரசாங்கத்திற்கு மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு விரும்பமில்லை. அதிகார பகிர்வை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஒருகாலத்தில் நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே. மாகாண சபைகள் கொண்டுவரப்படும் போது இந்த நாடு இரண்டாக பிளவடையும் என்று போராட்டம் நடத்தியதுடன், வேட்பாளர்கள் 6000 பேரின் உயிர்களும் இல்லாமல் செய்யப்பட்டன . அந்த நிலைப்பாட்டிலா இன்னும் இருக்கின்றீர்கள்?அதனாலா தேர்தலை நடத்தாமல் இருக்கின்றீர்கள்?

நல்லிணக்கம் என்பதனை வாய் வசனங்களால் பேசி பலனில்லை. அனைவருக்குமான தீர்வாக மாகாண சபைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன . அனைவரையும் அதிகார பகிர்வில் இணைக்க வேண்டும். இந்நிலையில் நீங்கள் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றீர்கள் என்றால் நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்றே கூற வேண்டும். ஒருமைப்பாட்டுக்கு நீங்கள் இணக்கம் என்றால் தேர்தலை நடத்துங்கள்.

இதேவேளை மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படியென்றால் நீங்கள் அதிகார பகிர்வை விரும்பவில்லை என்றே அர்த்தம். அதன்படியே மாகாணங்களின் கீழுள்ளவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா?  . அன்று பந்துல மற்றும் பஸில்கள் செய்தவேலைகளையே நீங்களும் செய்கின்றீர்கள். மாகாண சபைகளை பலப்படுத்துங்கள். அதன் அதிகாரங்களை வழங்குங்கள்.  மாகாண சபைகளை பலப்படுத்தி செல்லுங்கள். ஊரில் உள்ளவர்கள் நியமிக்கும் பிரதிநிதிகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள்  என்றார்.