பொசன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சாரணர் பொசன் வலயத்தை முன்னிட்டு, கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை (28) மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (29) ஆகிய தினங்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்தில் இருந்து பொலிஸ் தலைமையக சுற்றுவட்டாரம் வரையிலான சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் சுமார் 500 மீற்றர் தூரம் இந்த பொசன் வலயம் அமைக்கப்படவுள்ளது.

அதற்கமைய, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்ப்படுத்தும் நோக்கில் கொழும்பு போக்குவரத்து பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ள தற்காலிக வீதி கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிகள் குறித்த தகவல்களை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ரீகல் சந்தியிலிருந்து சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தைக்குள் நுழைதல், ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை – மலே வீதி சந்தியிலிருந்து மலே வீதிக்குள் நுழைதல், சாரணர் மாவத்தையிலிருந்து கொம்பனித் தெரு மேம்பாலம் நோக்கி நுழைதல் ஆகிய போக்குவரத்து வீதிகள் தடைப்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தக்கூடிய மாற்றுவழிகளாக, ரீகல் சந்தி பக்கமிருந்து வரும் வாகனங்கள், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக காமினி சுற்றுவட்டாரம் நோக்கியும், செரமிக் சந்தி - லோட்டஸ் வீதி ஊடாக என்.எஸ்.ஏ சுற்றுவட்டாரம் நோக்கியும் பயணிக்கலாம்.

ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை பக்கமிருந்து வரும் வாகனங்கள், மலே வீதி மேம்பாலம் மற்றும் அலியா நான சுற்றுவட்டாரம் ஊடாக சாரணர் மாவத்தை நோக்கிப் பயணிக்கலாம்.

சாரணர் மாவத்தை, கொம்பனித் தெரு மேம்பாலத்துக்கு அருகில் இருந்து வரும் வாகனங்கள், என்.எஸ்.ஏ சுற்றுவட்டாரம் மற்றும் அலியா நான சுற்றுவட்டாரம் நோக்கிப் பயணிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொசன் வலயத்தைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்காக வாகன நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி,

டி.ஆர். விஜேவர்தன மாவத்தை வாகன நிறுத்துமிடம்

குமரரத்தினம் வீதி மற்றும் கியூ வீதி

வொக்ஷோல் வீதி

பழைய பாதுகாப்பு அமைச்சு வளாகம்

ஷங்ரி-லா ஹோட்டலுக்கு அருகிலுள்ள வளாகம்

யூனியன் பெட்டிஷன் அக்சஸ் டவர்

லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடம்

பழைய மெனிங் சந்தை வாகன நிறுத்துமிடம்

சாமர்ஸ் வாகன நிறுத்துமிடம்

குறித்த தினங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இந்த மாற்றுவழிகள் மற்றும் வாகன நிறுத்தங்களைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.