நக்கிள்ஸ் பகுதியில் அண்மையில் குகையொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவுப் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி இனோக்கா ரணசிங்கவின் ஆலோசனைக்கமைய, அதிகாரசபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

“தகாத முறையில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்கள் அல்லது பெண்களின் பெயர், புகைப்படம், காணொளி அல்லது வேறு ஏதேனும் வகையில் அவர்களின் அடையாளம் வெளிப்படுமாறு பிரசுரிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தண்டனைச் சட்டக்கோவையின் 365 (இ) பிரிவின் கீழ் இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றமாகும் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களுக்கோ வழங்கியவர் யார் என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

எனினும், இப்புகைப்படங்கள் யாரால் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றைப் பகிரங்கப்படுத்தும் நபர்கள் அல்லது தரப்பினர் சட்டத்தின் முன் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.

அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும். தகாத வகையில் குற்றங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் அடையாளம் வெளிப்படும் தகவல்களை வெளித் தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபரினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒருவேளை பொலிஸ் போன்ற பொறுப்புவாய்ந்த நிறுவனமொன்றிலிருந்து இப்புகைப்படங்கள் வெளியாகியிருப்பது கண்டறியப்பட்டால், அது பாரதூரமான குற்றமாகக் கருதப்பட்டு பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

குகைக்குள் சிக்கிய சிறுமியின் அடையாளத்தை அம்பலப்படுத்தியவர்களுக்கு சிறை தண்டனை | Investigation Into The Posting Of The Girl Photo

அதற்கமைய, நக்கிள்ஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.

அதற்கமைய, இதற்கு தொடர்புடைய நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என சஜீவனி அபேகோன் வலியுறுத்தியுள்ளார்.