சென்னை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் ஆர்.ராமாராவ். கடந்த 46 ஆண்​டுகளாக முதல்​நிலை (கிளாஸ் 1) ஒப்​பந்​ததா​ரராக இருந்து வரும் இவர், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​துள்ள மனு விவரம்: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்பட்ட பேருந்து வழித்​தட சாலைகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முடித்​துக் கொடுத்​தும், பணிகளுக்​கான அளவீடு கணக்கு மற்​றும் வவுச்​சர்​கள் சமர்ப்​பித்த பிறகும், ரூ.25.79 கோடிக்கான பில் தொகை இது​வரை வழங்​கப்​பட​வில்லை.

இந்த பில் தொகைக்​காக 18 சதவீத ஜிஎஸ்டி​யாக ரூ.4.89 கோடியை ஏற்​கெனவே செலுத்​தி​விட்​டேன். விதி​களின்​படி 14 நாட்​களுக்​குள் ஒப்​பந்த தொகையை வழங்க வேண்​டும். ஆனால், பல மாதங்​கள் கடந்​தும் மாநக​ராட்சி நிர்​வாகம் பணத்தை வழங்​காமல் காலம் தாழ்த்தி வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறி​யிருந்​தார்.

நீதிபதி என்.செந்​தில்​குமார் முன்பு இந்த மனு விசா​ரணைக்கு வந்தது. அப்​போது மனுதா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் வி.இளங்​கோவன், “பணிகள் முடிக்​கப்​பட்டு ஓராண்டு ஆகி​யும் மாநக​ராட்சி நிர்​வாகம் இது​வரை தொகையை வழங்​க​வில்லை” என வாதிட்​டார். இதற்கு பதில் அளித்த மாநக​ராட்சி தரப்பு வழக்கறிஞர் ஜேக்​கப், “மாநக​ராட்​சி​யில் தற்​போது போதிய நிதி இல்​லாததால், ஒப்​பந்​ததா​ரருக்கு உரிய தொகையை சிறிது சிறிதாக வழங்க நட​வடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

வாதங்​களைக் கேட்ட நீதிபதி செந்​தில்​குமார், “பணிகள் முடிந்து பில் கையெழுத்​தாகி ஓராண்டு ஆகி​யும் பணம் கொடுக்​க​வில்லை என்​றால், மாநக​ராட்சி ஆணை​யரின் சம்​பளத்தை நிறுத்தி வைக்கலாமா அல்​லது 6 சதவீத வட்​டியுடன் சேர்த்து தொகையை வழங்க உத்​தர​விடலாமா?” என்று கேள்வி எழுப்​பினார். தொடர்ந்து, வழக்கு விசா​ரணையை டிச.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். எத்​தனை நாட்​களுக்​குள் ஒப்​பந்​ததா​ரருக்கு முழுபணமும் வழங்​கப்​படும் என்​பது குறித்து அன்​றைய தினம் மாநக​ராட்சி நிர்​வாகம் விளக்​கம் அளிக்க வேண்​டும் என்​றும் உத்தர​விட்​டார்.