திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கி கோவில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், மற்றும் பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு டிசம்பர் 15ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வரை திருப்பரங்குன்றம் மலையில் சிஆர்பிஎப் பாதுகாப்பு தொடரும் என கூறப்பட்டுள்ளது.