‘அனைத்து பெண்களும் கண்ணியத்திற்குரியவர்கள்’ – காங்கிரஸின் சுப்ரியா கருத்துக்கு கங்கனா பதிலடி

சமூக வலைதளத்தில் தன்னை மோசமாக விமர்சித்து பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் சுப்ரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகையும், பாஜக மண்டி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

“அன்புள்ள சுப்ரியா அவர்களுக்கு. கடந்த 20 ஆண்டு காலமாக ஒரு நடிகையாக பல்வேறு பாத்திரங்களில் நான் நடித்துள்ளேன். அப்பாவி பெண்ணாக, கடவுளாக, பேயாக, தலைவியாக என அந்த பாத்திரங்கள் அமைந்துள்ளன. நம் மகள்கள் குறித்த தவறான கருத்துகளில் இருந்து நாம் அவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகளை குறித்த ஆர்வத்தை கடந்து நாம் வளர வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக பாலியல் தொழிலாளர்களை அவதூறாக பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவரது கண்ணியத்திற்கு தகுதியானவர்” என கங்கனா தெரிவித்துள்ளார்.

‘மண்டியில் இப்போதைய ரேட் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?’ என காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா பதிவிட்டிருந்தார். அதனுடன் கங்கனாவின் புகைப்படமும் பகிரப்பட்டு இருந்தது. இதனை இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

சுப்ரியா விளக்கம்: “என்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அக்சஸை பலர் கொண்டுள்ளனர். அவர்களில் யாரோ ஒருவர் தான் இந்த பதிவை போஸ்ட் செய்துள்ளார். எனக்கு அது குறித்த விவரம் தெரிய வந்ததும் நான் அதை டெலிட் செய்து விட்டேன். எனது பெயரில் ட்விட்டரில் இயங்கும் போலி கணக்கில் இதனை முதலில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டர் வசம் நான் புகார் தந்துள்ளேன்.

ட்விட்டரில் இருந்த அந்த பதிவை அப்படியே காப்பி செய்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். நான் எந்தவொரு தனிநபருக்கும், பெண்ணுக்கும் எதிராக தனிப்பட்ட ரீதியான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என அனைவரும் அறிவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.