அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், “வெனிசுவேலாவில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் ” குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

“சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் சீனாவின் தலைமைத் தூதுவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 63 வயதான மதுரோ கண்கட்டி, கைகட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சனிக்கிழமை வெளியாகி வெனிசுவேலா மக்களை அதிர்ச்சியடையச் செய்ததைத் தொடர்ந்து, வாங் யி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும்.

நிக்கோலாஸ் மதுரோ தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நியூயோர்க்கில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

உலகளாவிய தூதரக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை பீஜிங் கொண்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான எதிர்பாராத நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நோக்கத்தை சீனா தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, “உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றுவோம்” என சீனா உறுதியளித்திருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக மோதித் தன்னை நிலைநாட்டிய அனுபவம், சீனாவின் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

“இது சீனாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெனிசுவேலாவுக்கு நம்பகமான நண்பராக தங்களை காட்ட விரும்பினோம்,” என்று மதுரோ கைது செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவ்சியுடன் (Qiu Xiaoqi) அவர் நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்திருந்த சீன அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், மதுரோவின் மகன் 2016ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்ற சீனாவின் முன்னணி பெக்கிங் பல்கலைக்கழகத்தை ((Peking University) 2024ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பாக தூதரக ஈடுபாடுகள் இருந்தபோதும், அவர் மீண்டும் சீனாவுக்கு திரும்புவாரா என்பது குறித்து உறுதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடைகளை கடுமையாக்கியதிலிருந்து வெனிசுவேலாவுக்கு பொருளாதார ஆதரவாக இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் சமீபத்திய முழு ஆண்டுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனா சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வெனிசுவேலாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது.

சீனாவின் மொத்த கொள்முதல்களில் கிட்டத்தட்ட பாதி மசகு எண்ணெயாகும்.

மேலும், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் (American Enterprise Institute) என்ற சிந்தனைக் குழு வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டுக்குள் வெனிசுவேலாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன.