அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: கராச்சி துறைமுகத்தில் ஈரானின் 3,000 கொள்கலன்கள் தேக்கம்

காசா மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானுக்கு அனுப்பப்பட வேண்டிய சுமார் 3,000 சரக்குக் கொள்கலன்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஈரான் மீது விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் ஹோர்முஸ் நீரிணையில்  நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தச் சரக்குகளை ஏற்றிச் செல்ல வேண்டிய கப்பல்கள் வராததே இந்த முடக்கத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த வியூகம், அந்நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது.

குறிப்பாக, பெப்ரவரி 28 முதல் தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் போரின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 13 முதல் அமெரிக்கா இந்தத் தீவிரமான தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

இந்தச் சூழலைச் சமாளிக்க, பாகிஸ்தான் வழியாக ஒரு புதிய நிலவழிப் பாதையைப் (Land Route) பயன்படுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர்.

கராச்சியில் தேங்கியுள்ள கொள்கலன்களை சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்லையின் வழியாக லொறிகள் மூலம் ஈரானுக்குள் கொண்டு செல்வதே இந்தத் திட்டமாகும்.

கடல் வழியை விட நிலவழிப் போக்குவரத்து மெதுவானது மற்றும் செலவு அதிகமானது என்றாலும், தற்போதைய நெருக்கடியில் இது ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: கராச்சி துறைமுகத்தில் ஈரானின் 3,000 கொள்கலன்கள் தேக்கம் | 3 000 Iranian Containers Stuck In Karachi Port

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடாமல், ஈரானுக்குச் சார்பான நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஈரான் சுங்கக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், இதற்காக சீன யுவான் மற்றும் கிரிப்டோகரன்சிகளை ஈரான் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது ஈரானுக்கான வர்த்தகத்தில் பெரும் சவாலாக உள்ளது.