அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள செயின்ட் ஹெலினா தீவுப் பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததோடு, 20க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உணவு விடுதியுடனான இந்த பாரில் அதிகளவிலானோர் மது அருந்திக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவேளை சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஏனையவர்கள் பாதுகாப்பு கருதி பாரிலிருந்து வெளியேறி, அருகில் உள்ள கடைகள், கட்டடங்களுக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளானோரின் உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட அதேவேளை சுகாதார பணியாளர்கள் உடனடியாக களத்துக்குச் சென்று, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாரில் பணியாற்றும் சமையற்காரர் ஒருவர், அவ்வேளை தான் நிறைய துப்பாக்கிச் சூடு சத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் இதுவரை வெளிப்படாத நிலையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக நடந்த சம்பவமா என்பதை கண்டறிய பியூபோர்ட் கவுன்ட்டி செரீப் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.