அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும்.
இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.
இதுதொடர்பாக அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் வெளியிட்டு உள்ளார். கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.