மத்திய கிழக்கு போரினால் சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என அண்மையில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என இந்திய மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.
இதுபற்றி இந்திய மத்திய அரசு வட்டாரங்கள்,
இந்தியாவில், ஒரு குடும்பம் ஓராண்டுக்கு சராசரியாக 7 அல்லது 8 சிலிண்டர்களை பயன்படுத்துகிறது. அதாவது, 6 வாரங்களுக்கு முன்பாக அடுத்த ‘ சிலிண்டர் வாங்கத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்களிடம் போதிய சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளது.
எனினும், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்படுவதையும் தடுக்க சமையல் எரிவாயு முன்பதிவு கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடையற்ற விநியோகத்துக்காக, சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு சுத்திகரிப்பு நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.
சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும். ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.





