இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறி 11 மலையேற்ற வீரர்கள் பலி- 22 பேர் மாயம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணம் அகம் பகுதியில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு மலையேற்ற வீரர்கள் பலரும் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம்.அதன்படி நேற்று 75-க்கும் மேற்பட்ட வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அந்த மலையின் 9,800 அடி உயரத்தில் சக்திவாய்ந்த எரிமலை உள்ளது.இந்த எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் புஸ்வாணம் போல வானத்தை நோக்கி தீக்குழம்பு வெளியேறியது.

இதனையடுத்து இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் டன்கணக்கில் அருகில் உள்ள கிராமங்களை மூடியது.இதனால் அந்த கிராமங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிைடயே மலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.எனினும் இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்த 11 மலையேற்ற வீரர்களின் உடல்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி மேலும் 22 மலையேற்ற வீரர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.