இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு “ஒருபோதும் சரணடையாது” என்று அதன் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை லெபனானுக்கு இந்தப் போர் பரவிய பிறகு அவர் ஆற்றிய முதல் உரையில், 2024-ஆம் ஆண்டின் இறுதியில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா கடைப்பிடித்ததாகவும், ஆனால் இஸ்ரேல் “அதில் உள்ள எந்தவொரு விதியையும் மதிக்கவில்லை” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாங்கள் ராஜதந்திர ரீதியிலான தீர்வை ஏற்றுக்கொண்டோம், அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்க அது ஒரு வாய்ப்பு என்று கருதினோம். அத்துடன்’பொறுமைக்கும் எல்லை உண்டு’ என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், எங்கள் தேர்வு உச்சக்கட்ட தியாகம் வரையிலும், எல்லைகள் கடந்தும் அவர்களை எதிர்த்துப் போராடுவதே ஆகும். நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம்” என்று ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் முழுவதும் பரவலான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், தெற்கு லெபனானுக்குள் தனது படைகளையும் அனுப்பியுள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.





