ஈராக்கிலுள்ள சுவீடன் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரை

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள சுவீடன் தூதுரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் புனித குர்ஆன் நூலை எரிக்கும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஈராக்கில்  சுவீடன் தூதரகம் இன்று வியாழக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என சுவீடன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், தூதரகத்தையும் ஊழியர்களையும் பாதுகாப்பது ஈராக்கிய அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

சுவீடன் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஈராக்கிய வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறு பாதுகாப்புப் படையினரை கோரியுள்ளது.

சுவீடனிலுள்ள ஈராக்கிய தூதரகத்துக்கு வெளியே இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்த சுவீடன் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதன்போது புனித குர்ஆன் மற்றும் ஈராக்கிய தேசிய கொடியை எரிப்பத்றகு இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.