லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘ஹோர்முஸ் நீரிணையை’ மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. எனினும், இத்தகைய பதற்றமான சூழ்நிலையிலும் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை இன்று (21) ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்றைய தினம் சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார். அதேபோல், ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான ஈரானிய தூதுக்குழுவும் சனிக்கிழமை இரவே அங்கு சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரும் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர்.
முந்தைய பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்திய பாகிஸ்தான், “அமெரிக்கா – ஈரான் இடையேயான புரிந்துணர்வுகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும்” என அதன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தின் முதல் விதியான “லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்ற 14 அம்ச வரைவை அமெரிக்கா நிலைநாட்டத் தவறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடகப்பேச்சாளர் டிம் ஹாக்கின்ஸ், “ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் சீராக இயங்கி வருகிறது. இந்த நீரிணை ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மட்டும் சுமார் 55 வணிகக் கப்பல்கள் உலகச் சந்தைக்காக 17 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயுடன் இந்த நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. பிபிசி தரவுகளின்படி சில கப்பல்கள் திரும்பிய போதிலும், எண்ணெய் ஏவுகலன்கள் தொடர்ந்து பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், சனிக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புப் படை லெபனானில் உள்ள 80 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது கொடூர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் லெபனானில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 2 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து இதுவரை லெபனானில் 4,057 பேர் பலியாகியுள்ளனர். இத்தாக்கதலில் இஸ்ரேல் தரப்பிலும் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட அமைதி ஒப்பந்தத்தைக் குலைப்பதற்காகவே (Sabotage) இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
“லெபனானில் தற்போது நிலைமை படிப்படியாகக் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே எங்களது இறுதி இலக்கு. இன்றைய பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் லெபனான் போர்நிறுத்தம் குறித்துப் பெரிய முன்னேற்றத்தை எட்டுவோம் என நம்புகிறேன்.” என துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ள நிலையில், இன்றைய சுவிஸ் பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





