ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமெரிக்கா

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் டக் பர்கம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 17 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வரும் ‘இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வணிக மன்றத்தில்’ உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘எரிசக்தி ஆதிக்கக் கொள்கை’ என்பது, அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், நட்பு நாடுகளுக்குத் தடையின்றி எரிசக்தி ஆதாரங்களை விற்பனை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய நாடுகளுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி விநியோகத்தை அமெரிக்காவினால் உறுதிப்படுத்த முடியும் என்றும், பயங்கரவாத ஆட்சியால் இந்த விநியோகச் சங்கிலியை ஒருபோதும் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முக்கியமான கனிம வளங்களுக்காக நாடுகள் சீனா மீது தங்கியிருப்பதை குறைத்து, பாதுகாப்பான மாற்று வழிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னரே இந்த மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது. இது அரசியல் தலைவர்களையும் அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களையும் வர்த்தக ஒப்பந்தங்களுக்காக ஒன்றிணைக்கும் ஒரு தளமாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.