உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை

சூரிய ஒளியே குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி, தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர் ஹியூமன் பவர்’ கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத ஆண் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார் மாக்சிம் லியுட்டி. அத்துடன் சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று கூறி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்றும் தனது மனைவியை கட்டாயப்படுத்தி தடுத்துள்ளார்.

ரிஷிகள் பழங்காலத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் பிராண சக்தி மூலம் உயிர்வாழ்ந்தனர். அவர்கள் போல, தன் குழந்தையும் உயிர் வாழும் எனக் கூறி குழந்தையை வைத்துச் சில சோதனைகளை மாக்சிம் செய்துள்ளார். இதுதவிர, உடலின் ஆன்மிக ஆற்றலை மேம்படுத்த பெர்ரி போன்ற உணவுகளை பிஞ்சு குழந்தைக்கு அவர் கொடுத்ததுடன், குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நிமோனியா காரணமாக குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து, மாக்சிம் லியுட்டியை கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் குழந்தைக்கு வேண்டுமென்றே தீவிரமான உடல் தீங்கு விளைவித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.