‘எங்களின் தைரியத்தை சோதிக்காதீர்’ – பாகிஸ்தானுக்கு ஆப்கன் அமைச்சர் எச்சரிக்கை

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்த செயலை நாங்கள் தவறாகக் கருதுகிறோம்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது. யாராவது இதைச் செய்ய விரும்பினால், அவர்கள் சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் எங்களைப் பற்றி கேட்க வேண்டும், அப்போதுதான் ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்கள் விளங்க முடியும்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விரிவான விவாதம் நடத்தினோம். ஆப்கானிஸ்தானை எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த அணுகுமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை எச்சரிக்க விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எந்தவொரு எல்லை தாண்டிய நடவடிக்கையையும் நாங்கள் கண்டிக்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களின் பொறுமை மற்றும் தைரியத்தை சவால் செய்யக்கூடாது. அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவதில் ஆப்கானிஸ்தான் ஒரு சமநிலையான அணுகுமுறையை கொண்டுள்ளது” என்றார்.

சமீபத்திய மாதங்களில், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானுடனான நெருக்கத்தை இந்தியா அதிகமாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

சமீபத்திய செய்திகள்