காட்டின் ராஜாவான சிங்கத்தை தேசிய பூங்காக்களில் கூண்டுக்குள் பார்த்திருப்போம். இந்நிலையில் சிங்கத்துக்கு தட்டில் வைக்கப்பட்ட உணவை ஒரு பெண்ணும் சேர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் சிங்கத்தின் அருகில் ஒரு பெண் அமர்ந்துள்ளார். அப்போது சிங்கத்தின் முன் ஒரு தட்டில் அசைவ உணவு வைக்கப்படுகிறது. அந்த உணவை சிங்கமும், பெண்ணும் ருசிப்பதையும், உணவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதையும் காண முடிகிறது. தட்டில் வைக்கப்பட்ட இறைச்சி துண்டை சிங்கம் எடுத்து சாப்பிடுவது போல அந்த பெண்ணும் அதே தட்டில் இருந்து இறைச்சியை எடுத்து சுவைக்கிறார்.
இந்த வீடியோ ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள் ராஸ் அல் கைமாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோ 30.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள், இது போன்ற விலங்குகள் காட்டில் இருக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மற்றொரு பயனர், ஒரு காட்டு மிருகம் வசதி படைத்தவர்களின் பொழுது போக்கிற்காக மாறும் அளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளதாக ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.