சரக்கு திருட்டில் ஈடுபட்டு வந்த 15 இந்திய வம்சாவளியினரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் பீல் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் தொடர் சரக்கு திருட்டு நடைபெற்று வந்துள்ளது. சரக்கை ஏற்றிச்செல்லும் லாரிகளை இடைமறித்து திருடிச் செல்வதை திருட்டு கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவங்கள் மிகுந்த திட்டமிடலுடன் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், சரக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க பீல் பிராந்திய காவல் துறை சிறப்புக் குழுவை உருவாக்கியது.
இதையடுத்து சரக்கு திருட்டில் ஈடுபட்டுவந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரும் 22 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இவர்கள் மீது 73 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்களிடமிருந்து 6.9 மில்லியன் டாலர் (ரூ.56 கோடி) மதிப்பிலான சரக்குகளும் 2.2 மில்லியன் டாலர் (ரூ.18 கோடி) மதிப்பிலான டிராக்டர் பெட்டிகளும் என மொத்தம் 9 மில்லியன் டாலர் (ரூ.74 கோடி) மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து பீல் பிராந்திய காவல் துறை கூறுகையில், “இந்தத் திருட்டுக் கும்பல் சரக்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அத்துமீறி சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் டிராக்டர்களை ஓட்டி வந்துவிடுகின்றனர். சில சமயம், ரோட்டில் சென்றுகொண்டிருக்கும் டிராக்டர்களை பின்தொடர்ந்து அந்த டிராக்டர்களை திருடி வந்துவிடுகின்றனர்.இது போல் பல்வேறு இடங்களில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுவந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.