வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் நேற்று மன்னிப்பு கோரினார். அதேநேரம் சரணடைய வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்தார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அமெரிக்க படைத்தலங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
காமேனி கொல்லப்பட்ட பிறகு ஈரானை நிர்வகித்து வரும் மூன்று பேர் கொண்ட இடைக்காலத் தலைமைக் குழுவில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசஷ்கியான் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், பெசஷ்கியான் அரசு தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றும்போது, ‘‘ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் என் சார்பாகவும், ஈரான் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் எந்த அண்டை நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படாது என்றும், ஈரானைத் தாக்காத நாடுகள் மீது ஏவுகணைகள் ஏவப்படாது என்றும் இடைக்காலத் தலைமைக்குழு ஒப்புக்கொண்டுள்ளது.
ஈரானிய மக்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் (ட்ரம்ப்) ஆசை, அவர்களின் கல்லறை யோடுதான் போகும்’’ என்றார்.
முன்னதாக இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தற்போது சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது. எந்த இலக்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்குமாறு எங்களது ஆயுதப் படைகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளோம்.
உண்மையில், எங்களது ராணுவப் பிரிவுகள் இப்போது முன்கூட்டியே வழங்கப்பட்ட பொதுவான வழிமுறைகளின் அடிப்படையில் ஓரளவு தனித்தே செயல்பட்டு வருகின்றன’’ என்றார்.





