சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக ஜோர்ஜீவா மீண்டும் தெரிவு !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றுவதற்காக அவர் நேற்று (12) தெரிவு செய்யப்பட்டார்.

அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் எனவும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த  கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

அதற்கு முன், அவர் 2017 ஜனவரி முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.