துபாய் துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த குவைத் நாட்டின் எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அக்கப்பல் தீக்கிரையாக்கப்பட்டு சேதமடைந்ததாக குவைத் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலை வேளையில் அல் சல்மி என்ற குவைத்தின் மிகப் பெரிய மசகு எண்ணெய் கப்பலே தாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து, கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட வேளையில் முழு அளவு சரக்குடன் கப்பல் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ட்ரோன் தாக்குதலால் தீப்பற்றி எரிந்த கப்பலின் அடிப்பாகம் சேதமடைந்துள்ளது என்றும் இதனால் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் குவைத் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சேதம் குறித்த விரிவான மதிப்பீடு நடைபெற்று வருகிறது. அத்துடன் கப்பலை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் உரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அக்கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்த அல் சல்மி கப்பல் 2011இல் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணெய் தாங்கிக் கப்பலாகும். குவைத் நாட்டுக் கொடியுடன் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பலின் மொத்த நீளம் 333 மீட்டர், அகலம் 60 மீட்டர் ஆகும்.


