ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 10 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும்.
தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரத்திலிருந்து தென்மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெக்கர்ஸ் டாலில் நடந்த இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கௌடெங் மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரெண்டா முரிடிலி, “அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள தெருக்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்து பேர் இறந்துவிட்டனர். அவர்கள் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் சில முக்கிய தங்கச் சுரங்கங்களுக்கு அருகிலுள்ள ஒரு வறுமை நிறைந்த பகுதியான பெக்கர்ஸ் டாலில் உள்ள ஒரு மதுக்கடைக்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது




