தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் நவாஸ் ஷெரீப் பிரதமராவார்: ஷெபாஸ் ஷெரீப்

 நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றி பெற்றால் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராவார் என்று தற்போதைய பிரதமரும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழ்ந்து வரும் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் அடுத்த சில வாரங்களில் நாடு திரும்ப இருக்கிறார். நாடு திரும்பியதும் தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார். இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவரது உத்தரவுப்படி தயாரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் மருத்துவ காரணங்களுக்காக நவாஸ் ஷெரீப் வெளிநாடு அனுப்பப்பட்டார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 12-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதற்கான அறிவிப்பு குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்விக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளப்படும். எந்தெந்த தொகுதிகளில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலை உருவாகிறதோ அங்கு நாங்கள் எங்கள் வேட்பாளரை நிறுத்துவோம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்த பிறகே காபந்து அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.