தேவையேற்படின் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை

சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு எனச் சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட  போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஈரான் தனது தவறான கணிப்புகளை மீண்டும் ஒருமுறை மீளாய்வு செய்ய வேண்டும். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தெஹ்ரானுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

ஈரான் தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடுத்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றது.

ஈரானின் இந்த அணுகுமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது. இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தெஹ்ரானுக்கே பாதகமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்