பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக கொழும்புக்கு வருகை தர அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.
60 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப்பிரிவால் பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஷெட்டியின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள பணத் தொகையை அவர் முதலில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப் பிரிவு (EOW) தலைமையிலான பாரிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) இன்னும் செயல்பாட்டில் உள்ளது எனவும், இது நீதிமன்றத்தின் அல்லது விசாரணை அமைப்பின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்வதை சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது எனவும் நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டது.
ஷில்பா ஷெட்டியின் சட்டதரணி கொழும்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கோரியபோது, நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அழைப்பின் நகலை கேட்டது. அழைப்பிதழ் தொலைபேசி மூலம் மட்டுமே கலந்துரையாடப்பட்டது எனவும், பயண அனுமதிக்குப் பின்னர் தான் எழுத்துப்பூர்வ ஆவணம் வழங்கப்படும் எனவும் சட்டதரணி விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், தடையை விடுவிக்க மறுத்து, எந்தவொரு பயண அனுமதியையும் கோருவதற்கு முன்பு தம்பதியினர் முதலில் 60 கோடி ரூபா மோசடி குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டது. இந்த வழக்கு தற்போது அக்டோபர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.